லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு லடாக்கில் சனிக்கிழமை (நவம்பர் 21) நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக லடாக் உருவான பிறகு நடத்தப்படும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 192 ஊராட்சி மன்றத் தலைவர் இடங்களில் 55 பேரும் 1,428 வார்டு உறுப்பினர் இடங்களில் 1,186 பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய இடங்களுக்கும் லே (21 வார்டுகள்), கார்கில் (13 வார்டுகள்) நகராட்சி கவுன்சில் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சனிக்கிழமை காலையில் இருந்தே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். பிற்பகல் நிலவரப்படி, நகராட்சி கவுன்சில் தேர்தலில் 40.57 விழுக்காடு வாக்குகளும் ஊராட்சி மன்றத் தேர்தலில் 60.18 விழுக்காடு, வார்டு உறுப்பினர் தேர்தலில் 63.48 விழுக்காடு வாக்குகளும் பதிவாயின.
அதிகபட்சமாக சங்கூ மாவட்டத்தில் 75.20 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.
துர்துக், போபராங் போன்ற தொலைதூர எல்லைக் கிராமங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. லடாக் எம்பி முகமது ஹனீஃபா கார்கிலில் தனது வாக்கைச் செலுத்தினார்.
அடிப்படை நிர்வாகம், ஜனநாயக அமைப்புகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்தப் பெருவாரியான வாக்குப்பதிவு காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்து, லடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு மன்றத்தின் 100 இடங்களுக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
