அதிக சத்தத்துடன் ஒலித்த இசை; கைக்குழந்தை உயிரிழப்பு

அதிக சத்தத்துடன் ஒலித்த இசை; கைக்குழந்தை உயிரிழப்பு

கோப்புப் படம்: டெக்கான்ஹெரால்டு

15 Nov 2026 - 3:47 pm

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிலைக் கரைப்பு ஊர்வலத்தின்போது இசைத் தொகுப்பாளரின் (டிஜே) வாகனத்திலிருந்து அதிக சத்தத்துடன் ஒலித்த இசையால் 20 நாள் பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஒலியின் அளவைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் டிஜே நடத்துநர்கள் அதனைக் கேட்காததால் குழந்தையின் இதயத் துடிப்பு நின்றுவிட்டதாகக் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

தாயார் ரீமா தேவிக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, இரைச்சலால் அழத் தொடங்கிய பின்னர் எவ்வித அசைவுமின்றி அடங்கிப் போனதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அக்குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

புகுந்த வீட்டின் ஆதரவும் உதவியும் இல்லாததால், ரீமா தேவி கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 10 நாள்களுக்கு முன்பு தாய்வீட்டிற்கு வந்ததாகக் குழந்தையின் அத்தை கூறினார்.

‘டிஜே’ இசை வாகனத்தை வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இருப்பினும், அவர்களின் எதிர்ப்பையும் மீறி வாகனம் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.

அதிக ஒலியால் குழந்தையின் இதயத் துடிப்பு நின்றதாகக் குடும்பத்தினர் கூறியபோதும், மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

காவல்துறையினர் ‘டிஜே’ இசை வாகனத்தைப் பறிமுதல் செய்து, குழந்தையின் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஜெய் சங்கர் மிஸ்ரா தெரிவித்தார்.

விசாரணை நடைபெற்றுவருவதாகவும் உடற்கூறாய்வு முடிவுகளைப் பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்