மகாதேவ் சூதாட்டச் செயலி முறைகேடு: முக்கியக் குற்றவாளி ஓமானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்

மகாதேவ் சூதாட்டச் செயலி முறைகேடு: முக்கியக் குற்றவாளி ஓமானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

02 Nov 2026 - 5:04 pm

2 mins read

புதுடெல்லி: மகாதேவ் இணையச் சூதாட்டச் செயலி முறைகேடு வழக்கின் முக்கியக் குற்றவாளியும் அதன் நிறுவனருமான சௌரப் சந்திராகரை, ஓமான் நாட்டிலிருந்து இந்தியாவின் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.

மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், சிபிஐ சிறப்புக் குழு ஒன்று ஓமான் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று, சௌரப் சந்திராகரைத் தங்கள் பொறுப்பில் எடுத்து, இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனை, இடைக்காலக் காவல் அனுமதி பெற்ற பிறகு, அவர் ராய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோத இணையச் சூதாட்டக் கட்டமைப்பின்மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி, அதை ‘ஹவாலா’ பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் முறைகேடுகளுக்குத் தடையின்றி ஆதரவு பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சந்திராகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இன்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்ட ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பின் அடிப்படையில் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்திராகரை, தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து வெற்றிகரமாக நாடுகடத்தி உள்ளதாக சிபிஐ தெரிவித்‌துள்ளது.

முன்னதாக, சௌரப் சந்திராகர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய இரு அமைப்புகளும் வழக்குகளைப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தன. அவர் அனைத்துலகக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

சௌரப் சந்திராகர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இயக்கிய மகாதேவ் செயலி மூலம் கிரிக்கெட், காற்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை மையமாகக் கொண்டு சட்டவிரோதச் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு கிளைகள் மூலம் இயங்கிவந்த சூதாட்ட வலைப்பின்னல் மூலம் ஏறக்குறைய ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்