மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரிய அளவில் பிறரைப் பார்த்துத் தேர்வு எழுதும் ஏமாற்றுச் செயல்கள் இடம்பெறும் தேர்வு நிலையங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 10, 12ஆம் ஆண்டு வகுப்புத் தேர்வுகளுக்கு இது பொருந்தும்.
‘எச்எஸ்சி’ 12ஆம் வகுப்புத் தேர்வுகளின் முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) 42 மாணவர்கள் பிறரைப் பார்த்துத் தேர்வு எழுதும் செயலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர உயர்நிலை, உயர்க்கல்விக் கழகம் அத்தகவலை வெளியிட்டது என்று என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமான தேர்வு நிலையங்களை வானூர்திகள், காணொளிகளைப் பதிவிடும் கேமராக்கள் ஆகியவற்றைக் கொண்டு கண்காணிக்குமாறு திரு ஃபட்னாவிஸ் செவ்வாய்க்கிழமையன்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். தேர்வு ஏமாற்றுச் செயல்களில் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைச் சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டது. தேர்வு ஏற்பாட்டுப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள திரு ஃபட்னாவிஸ், மாவட்ட ஆணையர்கள், காவல்துறையினர் ஆகியோரைத் தொடர்புகொண்டார்.
மாவட்ட ஆணையர்கள், சிறப்புக் குழுக்களை அமைத்து அந்தக் குழுக்கள் தேர்வுகள் தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு தேர்வு நிலையங்களைச் சென்றடையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்வு எழுதி சமர்ப்பிக்கப்படும் வரை அக்குழு நிலையத்தில் காத்திருக்கவேண்டும் என்று திரு ஃபட்னாவிஸ் சொன்னார்.
புறநகர்ப் பகுதிகளில், தேர்வுகளில் பிறரைப் பார்த்து பதில்களை எழுதும் ஏமாற்றுச் செயல்கள் இடம்பெறாமல் இருப்பதைத் தவிர்ப்பது மாவட்ட ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட சிற்றூர் நிர்வாகக் குழு ஆகிய தரப்பினரின் கூட்டு முயற்சியாகும் என்றும் அவர் சுட்டினார். அதேபோல், நகர்ப்புறப் பகுதிகளில் நகரமன்ற ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனுமதி இல்லாத யாரும் தேர்வு நிலையத்தின் 100 மீட்டர் பரப்பளவிலான சுற்று வட்டாரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது என்று திரு ஃபட்னாவிஸ் சொன்னார்.