புதுடெல்லி: இந்தியாவில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், 17 மாநிலங்களில் கிட்டத்தட்ட 57.57 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கான (எஸ்ஐஆர்) பணிகள் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
எனினும், கடந்த இரு மாதங்களில் எஸ்ஐஆர் பணியின்போது 5.57 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் தெரிவிப்பதாக டெக்கான் ஹெரால்டு குறிப்பிட்டது.
அம்மாநிலங்களில் மூன்றாம் கட்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அப்பகுதிகளில் மொத்தம் 35.50 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
அவ்வாண்டின் நடுப்பகுதியில் வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டபோது, வாக்காளர்களின் எண்ணிக்கை 1.62 விழுக்காடு அதிகரித்து 36.08 கோடியாக உயர்ந்தது.
எஸ்ஐஆர் பணிக்குப் பிந்தைய வரைவுப் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 29.93 கோடியாகக் குறைந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 15.7 விழுக்காடு குறைவு.
எஸ்ஐஆர் பணிக்கு முந்தைய பட்டியலையும் தற்போதைய வரைவுப் பட்டியலையும் ஒப்பிடுகையில் மொத்தம் 6.15 கோடிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அவர்களில் 1.11 கோடிப் பேர் (18%) மட்டுமே உயிரிழந்தவர்கள்; முகவரியில் இல்லாதோர், நிரந்தரமாக இடம் மாறியோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தோர் போன்ற பிற காரணங்களால் எஞ்சியோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எஸ்ஐஆர் பணிக்கும் இடைப்பட்ட காலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இருப்பினும், புதுடெல்லி, ஒடிசா, உத்தராகண்ட் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்தது.
மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 47.92 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டதே இந்த அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம்.
ஹரியானா போன்ற பிற மாநிலங்களில் 4.6 லட்சம் வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் வாக்காளர் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு 9.30 கோடியாக இருந்தது. கடந்த மாதம் அது 7.71 கோடியாகக் குறைந்தது.
2024ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்போது அந்த எண்ணிக்கை 9.71 கோடியாகவும் எஸ்ஐஆர் பணிக்குச் சற்று முன்பு 9.78 கோடியாகவும் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 41 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
தேர்தல் ஆணையம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
வரைவுப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமது குற்றச்சாட்டுகளை இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தாலும், விழுக்காட்டு அடிப்படையில் புதுடெல்லியில் அதிகபட்சமாக 35.89 விழுக்காட்டுச் சரிவு பதிவானது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எஸ்ஐஆர் பணிக்கும் இடைப்பட்ட காலத்தில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்த மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று எனத் தெரியவந்துள்ளது.


