பாரதீப்: ஒடிசாவில் பாரதீப் நகரில் உள்ள நேரு பங்லா மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) மாலை திடீரெனத் தீச் சம்பவம் ஏற்பட்டது.
இதில் 12 பெரிய படகுகள், ஐந்து இயந்திரப் படகுகள் என மொத்தம் 17 படகுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென உடனடியாகத் தெரியவில்லை. ஒரு படகில் பற்றிய தீ, அடுத்தடுத்து பரவி 17 படகுகளை எரித்ததாகக் கூறப்படுகிறது.
10 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமையல் உருளைகள், டீசல் சேமித்து வைத்த பெட்டிகள் வெடித்ததில் நிலைமை மோசமடைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
“ஒவ்வொரு படகிலும் 3,000 லிட்டர் டீசல், மீன்பிடி சாதனம் ஆகியவை இருந்தன. இதனால் எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உருவானது,” எனத் தீயணைப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விசாரணை தொடர்கிறது.

