அகமதாபாத்: இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சனிக்கிழமை (டிசம்பர் 7), குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கத்தில் ‘பிஏபிஎஸ்’ என்ற அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், திரு மோடி இதைத் தெரிவித்தார்.
காணொளி வாயிலாக பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி,“இந்தியக் கலாசாரத்தில் சேவை என்பது மிகப்பெரிய தர்மமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சேவை ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. பொதுச் சேவை என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்குச் சமமானது. இந்தச் சேவையைத் திட்டமிட்டு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். இதன்மூலம் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்,” என்றார் அவர்.
“பிஏபிஎஸ் தன்னார்வலர்கள் தங்கள் தன்னலமற்ற சேவையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்,” என்று மோடி குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அங்கு வசித்த இந்திய மாணவர்களைப் பத்திரமாக தாயகம் மீட்டுவர பிஏபிஎஸ் அமைப்பினர் உதவி செய்தனர்.
“லட்சக்கணக்கானவர்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணையும்போது, அது நாடு மற்றும் சமுதாயத்தின் மிகப்பெரிய சக்தியாக மாறும். அந்த வகையில், வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.
“இந்த இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் மக்கள் ஒன்றிணைகிறார்கள். அது ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது. இதற்காக பிஏபிஎஸ் தன்னார்வலர்களும் ஒரு தீர்மானத்தை எடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்,” என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.

