கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோலாலம்பூர் வர உள்ளதாக இந்தியாவிடம் மலேசியா தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26 முதல் 28 வரை மலேசியத் தலைநகரில் ஆசியான் மற்றும் கிழக்காசியத் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்க அதிபர் டிரம்ப்புக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல அந்த உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் மலேசியா அழைத்துள்ளது.
எனவே சீனப் பிரதமர் லி கெச்சியாங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரும் இம்மாத இறுதியில் கோலாலம்பூர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், திரு டிரம்ப் அந்தக் கூட்டத்திற்கு வருவாரா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. அவரது பயணத் திட்டம் குறித்து வெள்ளை மாளிகையோ அமெரிக்கத் தற்காப்பு அமைச்சோ எந்தவோர் அதிகாரபூர்வத் தகவலையும் வெளியிடவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கோலாலம்பூர் செல்வது குறித்து டெல்லியும் உறுதியானத் தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
இருந்தபோதிலும், திரு டிரம்ப்பையும் திரு மோடியையும் சந்திக்க வைத்து, வரி விவகாரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள அமெரிக்க-இந்திய உறவை சீர்ப்படுத்த மலேசியா முயற்சி மேற்கொண்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் ஒரு பகுதியாக, திரு டிரம்ப் மலேசியா வரக்கூடும் என்ற தகவலை டெல்லியிடம் மலேசியா தெரிவித்து உள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
திரு டிரம்ப்பும் திரு மோடியும் தங்களது மலேசியப் பயணத்தை உறுதி செய்தால், இந்தியாவுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரியை அமல்படுத்திய பின்னர் அந்த இருவருக்கும் இடையில் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பாக அது அமையக்கூடும்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஆனால், மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க வேளாண் விளைபொருள்கள், பால் பொருள்களுக்கான சந்தையைத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. அதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு, உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, இந்தியப் பொருள்களுக்கு திரு டிரம்ப் முதலில் விதித்த 25 விழுக்காட்டு வரி ஆகஸ்ட் 7ஆம் தேதியும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக அவர் விதித்த கூடுதல் 25 விழுக்காட்டு வரி ஆகஸ்ட் 27ஆம் தேதியும் நடப்புக்கு வந்தன.
ஆக, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரி வசூலிக்கப்படுவதால், இந்தியத் தொழில்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.