பாட்னா: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு (எஸ்ஐஆர்) எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க ‘எஸ்ஐஆர்’ நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இனிவரும் அனைத்துத் தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும் என்றார் கார்கே.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தைப் பீகார் மக்கள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எழும் எதிர்ப்பானது இந்திய ஜனநாயகத்திற்கான ஒரு முக்கியப் போராட்டம் என்று வர்ணித்தார்.
அயோத்தி கோவில் நிதி தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய திரு கார்கே, கடவுள் ராமர் தனது கண்களைத் திறந்து, தனது பெயரால் அக்கிரமம் செய்து கொள்ளையடித்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
