கோல்கத்தா: பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றியபோது மாணவர்கள் குறுக்கிட்டு அடுக்கடுக்காக கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.
பெண்கள், சிறார்கள், ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் ஆகியோரைப் பற்றிப் பேச திருவாட்டி மம்தா, லண்டனிலுள்ள கெல்லாக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, கடந்த ஆண்டு கோல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் பற்றியும் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த திருவாட்டி மம்தா, பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை தற்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது.
“எங்களிடம் ஏதுமில்லை. இங்கு அரசியல் செய்யக்கூடாது. அதற்கான இடம் இதுவன்று. என் மாநிலத்திற்கு வந்து, அங்கு என்னுடன் அரசியல் செய்யுங்கள்,” என்று பதிலளித்த மம்தா, தம்மை அவமானப்படுத்தி, படிக்கும் கல்லூரியை அவமதிக்கவேண்டாம் என்றார். சற்று நேரத்திற்குப் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
“மீண்டும் இங்கு வருவதற்காக என்னை ஊக்குவித்துள்ளீர்கள். உங்கள் சகோதரியான நான், யாரைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். வங்கப் புலிபோல நடைபோடுவேன். முடிந்தால் பிடித்துப் பாருங்கள்,” என்று மம்தா அறைகூவல் விடுத்தார்.