61 வயது கனடா பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்த இந்திய ஆடவர் கைது

61 வயது கனடா பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்த இந்திய ஆடவர் கைது

படம்: இந்தியா டுடே

15 Nov 2026 - 5:49 pm

2 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்குத் திருமணம் செய்வதற்காக வந்த 61 வயது கனடா பெண்ணை, அவரது வயதை அறிந்ததும் இந்திய ஆடவர் மணம்புரிய மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

ஹரியானாவின் பானிபட் பகுதியைச் சேர்ந்த நிதின் என்ற ஆடவரும் கனடாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண்ணும் ஓராண்டிற்கு முன்பு பழகுதளம் (dating app) மூலம் அறிமுகமாயினர். அவர்களது நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து, சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த அப்பெண் நவம்பர் 11ஆம் தேதி டெல்லி வந்தடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் வரவேற்ற நிதின், ராஜஸ்தானின் கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள நீம்ரானா பகுதியிலிருக்கும் தமது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் இரண்டு நாள்கள் தங்கினர்.

இந்நிலையில், அப்பெண்ணிற்கு 61 வயதாகிறது என்பதை அறிந்த நிதின், அவரைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மனமுடைந்த அப்பெண் நவம்பர் 13ஆம் தேதி கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தார்.

தூதரகம் கொடுத்த தகவலின்பேரில் நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் உள்ளூர்க் காவல்துறையினர் அங்குச் சென்றனர்.

விசாரணைக்காக இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக நிதின் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தனியார் பள்ளி ஆசிரியரான நிதினிடம் விசாரணை நடந்து வருகிறது. கோட்புட்லியில் உள்ள தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அப்பெண்ணைப் பாதுகாப்பாகக் கனடாவுக்கு அனுப்ப தூதரகத்துடன் இணைந்து அதிகாரிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்