லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவசர உதவி எண் 112க்கு வந்த அழைப்பில் பேசிய நபர், அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வரும் ஜனவரி 26ஆம் தேதி சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தின் இஸாத்நகர் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த நபர் பேசியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த இந்த அழைப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த தொடங்கினர். மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கைப்பேசி எண் யாருடையது என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்திற்குக் காவல்துறையினர் நேரில் சென்றனர்.
இதன்படி புதன்கிழமை (டிசம்பர் 18) காலை அணில் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காவல்துறையினரை மிரட்டும் வகையில் பேசி, கூச்சலிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் நோக்கம் மற்றும் மனநிலை குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

