கோல்கத்தா: புறப்படத் தயாராக இருந்த விமானம் ஒன்றின் கழிவறையில் பீடி புகைத்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அசோக் பிஸ்வாஸ் என்று அடையாளம் காணப்பட்ட அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்.
வேலைக்காக குஜராத் மாநிலம் நவ்சாரி என்னும் பகுதிக்குச் செல்ல கோல்கத்தா-சூரத் இண்டிகோ விமானத்தில் கடந்த வியாழக்கிழமை அவர் ஏறினார்.
கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் செய்யப்பட்டபோதிலும் பீடியையும் தீப்பெட்டியையும் மறைத்து விமானத்திற்குள் எடுத்துச் சென்றார் அவர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
அப்போது விமானக் கழிவறைக்குச் சென்ற அசோக், அங்கு பீடியை எடுத்துப் பற்றவைத்து புகைத்தார்.
புகையிலை வாசனையை உணர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், அது பற்றி உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த அவர்கள் விமானத்தில் சோதனை செய்தனர். பின்னர், தடை செய்யப்பட்ட பொருள்களை விமானத்திற்குள் எடுத்துச் சென்ற குற்றத்திற்காக அசோக்கை அவர்கள் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதர பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.