‘டிரெட்மில்’லில் ஓடியபோது மாரடைப்பு ஏற்பட்டு இளையர் உயிரிழப்பு

‘டிரெட்மில்’லில் ஓடியபோது மாரடைப்பு ஏற்பட்டு இளையர் உயிரிழப்பு

1 mins read
018d4662-5d0c-4e29-952d-8f8033626114
சித்தார்த் என்ற இந்த இளையர், உடற்பயிற்சிக்கூடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். - காணொளிப்படம்: டுவிட்டர்/ரவி பிரதாப் துபே

காஸியாபாத்: உடற்பயிற்சிக் கூடத்தில் ‘டிரெட்மில்’லில் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 19 வயது ஆடவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் நகரில் நிகழ்ந்தது.

தம் பெற்றோருக்கு ஒரே பிள்ளையான சித்தார்த் குமார் சிங் என்ற அந்த இளையர், நொய்டாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்ததாகக் கூறப்பட்டது.

‘டிரெட்மில்’லில் ஓடிக்கொண்டிருந்த சித்தார்த், தமது ஓட்டத்தை மெதுவாக நிறுத்துவதும் பின்னர் அவ்வியந்திரத்திலேயே மயங்கி விழுவதும் காணொளியில் தெரிகிறது.

அதனைக் கண்டதும், அப்போது உடற்பயிற்சிக் கூடத்திலிருந்த இருவர் விரைந்தோடி வந்து சித்தார்த்துக்கு உதவ முயல்வதையும் காணொளி காட்டியது.

அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் சித்தார்த் கைப்பேசி வழியாகத் தன் தாயுடன் பேசியதாக அவருடைய நண்பர்கள் கூறினர்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழக்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியானவண்ணம் உள்ளன.

சித்தார்த் ‘டிரெட்மில்’லில் மயங்கிவிழும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் உடற்பயிற்சியின்போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்