மீரட்: ரயில் செல்வதற்கான தண்டவாளத்தில் காரை ஓட்டியதாகக் கூறி அவ்வப்போது செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் நடந்துகொண்டுள்ளார் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.
குடிபோதையில் இருந்த அந்த ஆடவர் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிச் சென்றது அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.
தண்டவாளத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், அதனை ஒட்டியபடி அவர் காரோட்டிச் சென்றதால் நடைமேடையில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) மீரட் கன்ட் ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது.
காரை ஓட்டியவர் சந்தீப் டாக்கா என அடையாளம் காணப்பட்டது. ராணுவப் பணியாளரான அவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலப் பதிவெண் கொண்ட அந்தக் கார், ரயிலை ஒட்டியபடி இயக்கப்பட்டது காணொளியில் தெரிந்தது. நடைமேடையில் இருந்த பயணியர் இருக்கைகளில் பலவற்றை அது சேதப்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.
நடைமேடையில் காரைக் கண்ட பயணிகளில் சிலர், காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த சந்தீப்புடன் வாக்குவாதம் செய்தனர். காரை நிறுத்திய அவர்கள், உள்ளிருந்த சந்தீப்பை வெளியேற்றி, ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்த காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு, சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதனைக் கண்ட இணையவாசிகளில் பலர் வேடிக்கையாகக் கருத்து பதிவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“உண்மையிலேயே, ரயில் இருக்கைக்கு நேரடியாகச் செல்ல முயன்றார்,” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “உத்தரப் பிரதேசம் ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்துகிறது,” எனக் கூறியுள்ளார் இன்னொருவர்.
சம்பவத்தை உறுதிசெய்த மொராதாபாத் அரசு ரயில்வே காவல்துறை, சந்தீப்பைக் கைதுசெய்து வழக்கு பதிந்துள்ளதாக எக்ஸ் ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.