ஹைதராபாத்: நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பில் தெலுங்கானா முன்னாள் அமைச்சர்கள்மீது புகாரளித்தவர் கொலைசெய்யப்பட்டார்.
நாகவேலி ராஜலிங்கமூர்த்தி, 48, என்ற அந்த ஆடவருக்காகக் காத்திருந்த கொலையாளிகள், அவரைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கிக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோதாவரி ஆற்றின் குறுக்கே ஒரு லட்சம் கோடி ரூபாய் (S$15.45 பில்லியன்) செலவில் மேடிகட்டா அணை கட்டப்பட்டது.
ஆயினும், பாலத்தின் தூண்களில் சில மண்ணில் புதையத் தொடங்கியதால் அணைக்குப் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படாததால் காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதனையடுத்து, கடந்த 2023 அக்டோபரில் அப்போதைய தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்கள் ஆகியோர்மீது ராஜலிங்கமூர்த்தி புகாரளித்தார்.
இந்நிலையில், புதன்கிழமை (பிப்ரவரி 19) இரவு 7.30 மணியளவில் தெலுங்கானாவின் பூபாளபள்ளி மாவட்டத்தில் ராஜலிங்கமூர்த்தி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காத்திருந்த குண்டர்கள் அவரை இடைமறித்து கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜலிங்கமூர்த்தியைக் காப்பாற்ற விரைந்ததும் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
உடனடியாக ராஜலிங்கமூர்த்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதனையடுத்து, கொலையாளிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவருடைய குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். அதனால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

