மருத்துவ மாணவர்களுக்குக் கட்டாய கிராமப்புறச் சேவை: உச்ச நீதிமன்றம்

மருத்துவ மாணவர்களுக்குக் கட்டாய கிராமப்புறச் சேவை: உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்: இந்தியா டுடே

28 Oct 2026 - 7:37 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டாயமாக கிராமப்புறங்களில் சேவை புரிவது தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கர்நாடக மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு பெற வேண்டுமானால், மருத்துவ மாணவர்கள் ஓராண்டுக் காலம் கட்டாயமாகக் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, “முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கட்டாயப் பணி அவசியமாக உள்ளது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்பில் இது கட்டாயமாக்கப்படவில்லை. சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளதால், இதுகுறித்த உத்தரவுகளை மாநில அரசுகளே பிறப்பிக்கின்றன,” என்று மத்திய அரசின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது

அதையடுத்து, நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் இதற்கான முறையான நெறிமுறைகளை உருவாக்கலாம் எனப் பரிந்துரைத்தார்.

வழக்கின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி பி.எஸ். நரசிம்மா, இந்தியாவில் மருத்துவச் சேவையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளைக் கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கம் என்றார்.

நாட்டின் நலனுக்கும் சுகாதார மேம்பாட்டிற்கும் கிராமப்புறச் சேவை எந்த அளவுக்கு அவசியம் என்பதை ஆராய்ந்து, இதிலுள்ள அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. சுகாதார உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை, அது அரசின் கடமையுமாகும் என்று அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத் தேவைகளின் அடிப்படையில், மாநில அரசுகள், தேசிய மருத்துவ ஆணையத்துடன் கலந்தாலோசித்து, கட்டாய கிராமப்புறச் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்