காவலர் அடித்த அடியில் வெளியே வந்த பயணியின் குடல்

காவலர் அடித்த அடியில் வெளியே வந்த பயணியின் குடல்

2 mins read
e913f698-2e26-4380-adab-72d8777f548d
ஆத்திரமுற்ற பயணிகள் ரயில் நிலையத்தைச் சூறையாடினர். - மாதிரிப்படம்: இந்திய ஊடகம்

பாட்னா: ரயில்வே காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததில் பயணி ஒருவரின் வயிறு கிழிந்து, குடல் வெளியே வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலம், ஜனக்பூர் ரோடு ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 25) நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குச் சென்றுவிட்ட முகம்மது ஃபர்கான், 25, என்ற அப்பயணி, சில நாள்களுக்கு முன்னர்தான் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், காவலர் அடித்த அடியில் குடல் வெளியே வந்துவிட்டதால் அவர் கவலைக்கிடமான நிலையில் முசாஃபர்பூர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

சம்பவத்தையடுத்து காவலர் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாக சீத்தாமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களாம் தெரிவித்தார்.

மும்பை செல்லும் கர்மபூமி விரைவு ரயிலில் உறவினர் ஒருவரை ஏற்றி விடுவதற்காக ஃபர்கான் அங்கு சென்றதாகக் கூறப்பட்டது. ஜனக்பூர் ரோடு நிலையத்திற்கு ரயில் வந்ததும், பயணிகள் கூட்டம் அதில் முண்டியடித்து ஏறத் தொடங்கியது. இதனால், இருக்கை தொடர்பில் அவர்களுக்குள் சண்டை மூண்டது.

இதனையடுத்து, ரயில்வே காவலர்கள் தடியால் அடித்து, பயணிகளை விரட்ட முயன்றனர். அப்போது, காவலர் ஒருவரின் தடி, தையல் போடப்பட்டிருந்த ஃபர்கானின் வயிற்றைக் கிழித்ததால் அவரது குடல் வெளியே வந்தது.

தான் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தன்னை அடிக்க வேண்டாம் எனப் பலமுறை கேட்டுக்கொண்டதாகவும் ஃபர்கான் சொன்னதாக ‘ஃபிரீ பிரஸ் ஜர்னல்’ ஊடகச் செய்தி தெரிவித்தது.

காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் வெகுண்டெழுந்த பயணிகள் ஜனக்பூர் ரோடு ரயில் நிலையத்தைச் சூறையாடினர்.

அப்போது, பயணிகளுக்கும் அங்கிருந்த பணியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் அதில் சிலர் காயமடைந்து ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்