தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உற்பத்தித் துறை 15 ஆண்டுகளில் காணாத வளா்ச்சி

2 mins read
bd862f02-c190-4b94-a827-1fa22b2901d4
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், தாக்குப்பிடிக்கக்கூடிய, விரிவடைந்த இந்திய உற்பத்தித் துறையை, அத்துறையின் வளர்ச்சி காட்டுகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக எஸ்என்பி குளோபல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (Purchasing Managers’ Index (PMI)) 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்திக்கான பிஎம்ஐ ஆகஸ்ட் மாதத்தில் 59.3 ஆக உயர்ந்தது. இது ஜூலையில் 59.1 ஆக இருந்தது. இது 2008ஆம் ஆண்டில் இருந்து வேகமான முன்னேற்றத்தை குறிக்கிறது. பிஎம்ஐ நாடு முழுவதும் உள்ள ஏறக்குறைய 400 உற்பத்தியாளர்களிடம் மாதாந்திர கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.

“இந்திய உற்பத்தியின் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் மேலும் உத்வேகம் பெற்றது. தொழிற்சாலை ஆர்டர்கள், உற்பத்தியில் தொடர்ந்து தேவை அதிகரிக்கிறது,” என்று எஸ் & பி குளோபல் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி உயர்வு குறித்த கவலை காரணமாக அனைத்துலக விற்பனை வளர்ச்சி ஐந்து மாதங்களுடன் ஒப்பிட ஆகஸ்ட்டில் குறைந்தது.

இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக அழுத்தங்களின் தாக்கத்தை சமாளிக்க உதவிய வலுவான உள்நாட்டுத் தேவையின் காரணமாக ஒட்டுமொத்த வளர்ச்சி தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருந்தது.

தொடர்ந்து 18வது மாதமாக வேலை உருவாக்கம் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்தது. இருப்பினும், 2024 நவம்பருக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தின் வேலை உருவாக்க வேகம் ஆக பலவீனமாக இருந்தது.

உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்கள் மற்றும் பாதி தயாரான பொருள்கள் வாங்குவதை அதிகரித்தனர். அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியில் தொடர்ச்சியான வளர்ச்சி எதிர்பார்ப்புகளால், ஜூலை மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகளில் பதிவான குறைவான வளர்ச்சியிலிருந்து மீட்சியடைந்து, வணிக நம்பிக்கையும் மீண்டும் உயர்ந்தது.

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், தாக்குப்பிடிக்கக்கூடிய, விரிவடைந்த இந்திய உற்பத்தித் துறையை இவ்வளர்ச்சி காட்டுகிறது. நிலையான உள்நாட்டு தேவை, மேம்பட்ட விநியோக சங்கிலி ஆகியவற்றால் இவ்வளர்ச்சி சாத்தியமானதாக வல்லுநர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்