பெங்களூரு: குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக பெங்களூரில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அக்குடும்பங்கள் அனைத்து தேவைகளுக்கும் தனியார் நீரைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளன.
பெங்களூரில் பொது சுகாதார நெருக்கடி ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட லிங்கராஜபுரம் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள், கடந்த சில மாதங்களாகவே தங்கள் வீட்டில் சிலர் நோய்வாய்ப்பட்டு வருவதாக தெரிவித்தன.
தண்ணீர் மூலம் பரவும் தொற்றுகள் இருப்பதாக சந்தேகித்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.
அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நீர் மாசுபாடு காரணமாக 15 பேர் உயிர் இழக்க நேரிட்டது. அதே போன்று பெங்களூரிலும் நிலைமை மோசமடைந்து விடக்கூடாது என்று அந்நகரவாசிகள் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்திடம் தெரிவித்தனர்.
பல நாட்களாக நீர் மாசுபாடு குறித்து சந்தேகம் இருந்து வந்தாலும் இந்த வாரம்தான் அதன் வீரியம் தெளிவாகத் தெரிந்தது.
தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது, நுரை வருவதைக் கண்டு நிலத்தடி நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றதாகவும், அப்போதுதான் கழிவு நீர் கலப்பது தெரிய வந்தது என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“அது வெறும் மாசுபட்ட நீர் மட்டுமல்ல, துர்நாற்றமும் வீசும் கழிவுநீர் சேறு,” என்று லங்கராஜபுரம் குடியிருப்பாளரான பால் நியூமன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
குடிநீர் மாசுபாட்டால் பலருக்கு இரைப்பை குடல் வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள லிங்கராஜபுரத்தில் பெங்களூரு கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்ட ஆய்வில் நீர் மாசுபட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
குஜராத்திலும் பாதிப்பு
இதனிடையே, குஜராத் மாநிலம் காந்திநகரில் கடந்த மூன்று நாள்களில் பலர் ‘டைஃபாய்ட்’ காய்ச்சல் காரணமாக மருந்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (ஜனவரி 3) வரை 102 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடிகால் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக குடிநீர் மாசுபட்டதால் தொற்றுநோய் பரவியிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று, விசாரித்து, மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

