தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாவோயிஸ்ட் உயர்மட்டத் தலைவர் சரணடைந்தார்: தெலுங்கானா காவல்துறை

1 mins read
1f071b03-7159-4e0e-9908-dd7fea521ddc
மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் கல்பனா என்று அழைக்கப்படும் பொத்துலா பத்மாவதி, தெலுங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார். - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) உயர்மட்ட உறுப்பினரான கல்பனா என்று அழைக்கப்படும் பொத்துலா பத்மாவதி தெலுங்கானா காவல்துறையிடம் சனிக்கிழமை (செப்டம்பர் 13) சரணடைந்துள்ளார்.

மாண்ட மாவோயிஸ்ட் தலைவர் கி‌ஷெஞ்சி என்று அறியப்படும் மல்லோஜுலா கோட்டே‌ஷ்வர்ராவின் மனைவியுமான அவர் சுகாதாரக் காரணங்களை முன்னிட்டு சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாவோயிஸ்ட் மத்தியச் செயற்குழுவின் உறுப்பினரான 62 வயது பத்மாவதி, 43 ஆண்டுகளாகத் தலைமறைவாயிருந்து மைனாபாய், மையானாக்கா, சுஜாதா எனப் பல்வேறு பெயர்களில் செயல்பட்டார்.

அவரைப் பிடித்துக்கொடுப்போர் அல்லது அவரைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று இதற்குமுன் அறிவிக்கப்பட்டிருந்தது.

பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த பிறகு உடல்நலனைப் பேணுவதில் பத்மாவதி காட்டும் அக்கறையை அவரது முடிவு வெளிப்படுத்துகிறது என்றார் காவல்துறை தலைமை இயக்குநர் ஜிதெந்தர்.

“அரசாங்கம் வழங்கும் மறுவாழ்வு வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியத்தைப் பேணி, குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவதாகத் தனது பத்மாவதி வெளிப்படுத்தினார்,” என்றார் திரு ஜிதெந்தர்.

2023ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) மத்தியச் செயற்குழுவில் உறுப்பினராகப் பத்மாவதி சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தெலுங்கானா அரசாங்கம் அறிவித்த 25 லட்சம் ரூபாய் உள்பட பத்மாவதியைப் பிடித்துக்கொடுப்போருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சரணடைந்த பத்மாவதியிடம் 25 லட்சம் ரூபாயை வழங்கவிருப்பதாகக் கூறிய திரு ஜிதெந்தர், சரணடைவோருக்குத் தெலுங்கானா அரசாங்கத்தின் மறுவாழ்வு திட்டத்தின்படி கூடுதல் அனுகூலங்களும் கிடைக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்