டேராடூன்: கட்டாயமாகவோ அல்லது மோசடியாகவோ திருமணம் செய்வது கடும் குற்றமாகக் கருதப்படும் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் திருமணம் செய்யாமலும், திருமணத்தை மறைத்தும், ‘லிவ் இன் டுகெதர்’ (திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது) உறவில் ஈடுபடுவதும் கடும் குற்றமாக கருதப்படும் என அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் உத்தராகண்ட். கடந்த 2025 ஜனவரி 27ஆம் தேதி அங்கு பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் சமயம், பாலின வேறுபாடின்றி திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ‘லிவ் இன்’ உறவுகளுக்கு ஒரே சட்ட விதிகளை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பொது சிவில் சட்டத்தில் சில திருத்தங்களை உத்தராகண்ட் அரசு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திருத்தங்கள் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு அம்மாநில ஆளுநர் குருமித்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து கட்டாயமாகவோ, மோசடியாகவோ திருமணம் செய்வது, திருமணத்தை மறைத்து இன்னொரு திருமணம் செய்வது, ‘லிவ் இன்’ உறவில் ஈடுபடுவது இனி அம்மாநிலத்தில் கடும் குற்றங்களாக கருதப்படும்.
அதேபோல் ‘லிவ் இன்’ உறவில் உள்ள ஒருவர், அதை மறைத்து அதேபோன்ற மற்றொரு உறவில் ஈடுபடுவதும் குற்றம். இத்தகைய குற்றங்களுக்கு இனி ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சிறாருடன் இத்தகைய உறவில் ஈடுபடும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

