ராய்பூர்: இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் மணமுடித்த பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை ஆடவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
அந்த ஆடவர், நடிகை சன்னி லியோனின் பெயரில் ஒரு கணக்கை உருவாக்கி அதன்மூலம் மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி பெற்றதாகக் கூறப்படுகிறது.
சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாஸ்தாரி வந்தன் யோஜனாவின் ஆட்சியில் மணமுடித்த பெண்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் மாதந்தோறும் ரூபாய் 1,000 போடப்படும். அத்தகைய ஒரு கணக்கு சன்னி லியோனின் பெயரில் இருந்தது தெரிய வந்துள்ளது.
அவரின் பெயரில் கணக்கை உருவாக்கியதாக நம்பப்படும் ஆடவர் வீரேந்திர ஜோஷி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மணமுடித்த பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்துக்குத் தகுதிபெறுவோரை அடையாளம் காணும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டீஸ்கரில் உள்ள பஸ்டார் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறும் சம்பந்தப்பட்ட கணக்கை முடக்குமாறும் மாவட்ட ஆட்சியர் ஹரிஸ் எஸ்., மாதர், சிறார் மேம்பாட்டுப் பிரிவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.