சென்னை ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்: பாதுகாப்புப் படையினர் குவிப்பு

சென்னை ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்: பாதுகாப்புப் படையினர் குவிப்பு

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

05 Nov 2026 - 9:23 pm

2 mins read

சென்னை: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான புலம்பெயர் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து புறப்படத் தொடங்கியுள்ளனர்.

அதனால், வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகள் முழுக்க புலம்பெயர் ஊழியர்களால் நிரம்பியிருக்கிறது.

அதுபோல வட மாநிலங்கள் நோக்கிச் செல்லும் ரயில்களில், முன்பதிவு செய்த பெட்டிகளிலும்கூட வடமாநில ஊழியர்கள் ஏறி நின்று கொள்வதால், அவசரத் தேவைக்குக் கழிப்பறைக்குக்கூட செல்லமுடியாமல் அவதி அடைவதாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் கூறியிருக்கிறார்கள்.

மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் பிற வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் ஏறுவதற்குப் பயணிகள் முண்டியடிப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவில்லா பெட்டிகளில் இடம்பிடிக்கக் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு குழப்பமான சூழல் நிலவுகிறது.

இது பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

ஹவுரா மெயில் மற்றும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருப்பதால், பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இவ்விரு ரயில்களிலுமே தலா நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே உள்ளதால், பயணிகள் அந்தப் பெட்டிகளுக்குள் நெரிசலில் சிக்கித் திணறிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான கொள்ளளவைவிடப் பன்மடங்கு அதிகமாகிறது.

முன்பதிவில்லா பெட்டி ஒவ்வொன்றிலும் 100 பயணிகள் வரைதான் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், இந்த நெரிசலின் போது ஒவ்வொரு பெட்டியிலும் 200க்கும் மேற்பட்டோர் அடைபட்டுச் செல்கின்றனர்.

பெட்டிகளுக்குள் தரை, வாசற்படிகள், படிக்கட்டுகள், உடைமைகள் வைக்கும் பகுதிகள் மற்றும் கழிவறைகளுக்கு அருகிலுள்ள இடம் உட்பட கிடைக்கும் ஒவ்வொரு இடத்தையும் பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரத்தில் நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு மேலும் பல புலம்பெயர் ஊழியர்கள் ஊருக்குச் செல்வார்கள் என்பதால், எதிர்பார்க்கப்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அதிகமான ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்