புதுடெல்லி: மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச்சூழல், இந்தியாவிலும் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்ச்சூழல் காரணமாக இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா மேற்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை 30% விழுக்காடு குறைந்துள்ளது.
பல்வேறு மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்காக ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிகிச்சைக்கான செலவுகள் குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
பயணச்சீட்டு முன்பதிவு முதல் இந்தியாவில் விமானம் தரையிறங்கிய பின்னர் மருத்துவமனைக்குச் செல்வது, சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளிகளையும் அவர் தம் குடும்பத்தாரையும் வழியனுப்புவது வரை அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய மருத்துவச் சுற்றுலாவுக்கான பயணத் திட்டத்தை முன்கூட்டியே பயண நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன.
இதனால் விடுமுறைக்கால சுற்றுலாவைப் போல் இந்தியாவுக்கு ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவச் சுற்றுலாவாக வருகின்றனர்.
இந்திய மருத்துவச் சுகாதார சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாக ஏறக்குறைய 30-40% நோயாளிகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அந்நாடுகளில் இருந்து இந்தியா வரும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் சரிவைக் கண்டுள்ளது.
குறிப்பாக, ஈராக், ஒமான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் இந்தியாவுக்குச் சென்று சிகிச்சை பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் பத்து நாள்களுடன் ஒப்பிடும்போது, கடைசி பத்து நாள்களில் இந்தியாவுக்கு வருகைதந்த அனைத்துலக நோயாளிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 75 விழுக்காடு அளவு சரிவடைந்துள்ளதாக மருத்துவர்கள் சிலர் பிடிஐ செய்தி முகவையிடம் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச்சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தாரைப் பிரிந்து வேறு நாட்டுக்குச் செல்லத் தயக்கம், இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலை ஆகியவைதான் நோயாளிகளின் எண்ணிக்கை குறையக் காரணம் எனக் கருதப்படுகிறது.

