தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதம் தொடர்பில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க சீனாவிடம் இந்தியா வலியுறுத்து

2 mins read
ee66212e-3746-4c42-b8d0-5b4ef3c2bdc9
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் அங்கு சென்றுள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு சுழற்சி முறையில் தலைமை தாங்கும் சீனாவின் பங்களிப்பை இந்தியா ஆதரிப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமையன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் இருதரப்பும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அஜித் தோவல் வலியுறுத்தினார்.

இதற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதன் மூலம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு, சீனா நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம் என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், அஜித் தோவல் வலியுறுத்தியதாக இந்திய வெளியறவு அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருநாடுகளின் உறவுகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து இருவரும் மதிப்பீடு செய்தனர்.

“ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இருவரும் சுட்டிக்காட்டினர்.

“இருதரப்பு நலன் சார்ந்த மற்றும் வட்டார, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன,” என்று அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.

சீனா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகள் சில நேர்மறையான முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக அமைச்சர் வாங் குறிப்பிட்டார்.

“சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் நட்புறவைக் கடைப்பிடிக்க வேண்டும், இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வெற்றி பெறும் வாய்ப்புகளுக்காகப் பாடுபட வேண்டும்.

“முக்கியமான பிரச்சினைகளை முறையாகக் கையாள வேண்டும், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பராமரிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்