பெங்களூரு: நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு, வரும் பட்ஜெட்டில் 16,745 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.
மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சிவக்குமார், பெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யவும், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் மேகதாது திட்டம் மிகவும் அவசியமானது என்றார்.
அணை கட்டப்படுவதால் மூழ்கும் 5,000 ஹெக்டர் வனப்பகுதிக்கு மாற்றாக, வேறு நிலத்தை அடையாளங்காண மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த ஆண்டில் மட்டும் 341 டிஎம்சி காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்ததாகவும் 177 டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டதாகவும் திரு சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
நீர் வீணாவதைத் தடுக்க, கேஆர்எஸ், துங்கபத்ரா அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற தூர்வாரும் பணிகளைத் தொடங்க மத்திய நீர்வள அமைச்சு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
