புனே: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது புனே ஆலையில் ‘மேபேக் ஜிஎல்எஸ்’ வகை கார்களைத் தயாரிக்கத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவிற்கு வெளியே இந்த அதிநவீன சொகுசு காரைத் தயாரிக்கும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பு, மேபேக் ஜிஎல்எஸ் கார்கள் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு 2021லிருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.
இந்த அறிவிப்புடன் சேர்த்து, இந்த காரின் புதிய ‘செலிபிரேஷன் எடிஷன்’ வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3.17 கோடி (ஷோரூம் விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியின் காரணமாக, மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ் காரின் ஆரம்ப விலை தற்போது ரூ.2.75 கோடியாக (ஷோரூம் விலை) இருக்கும். இது, அதன் முந்தைய விலையை விட ஏறக்குறைய ரூ.40 லட்சம் குறைவு.
மெர்சிடிஸ்-மேபேக் வகை காரின் உலகளாவிய முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா முதல்முறையாக இடம்பிடித்துள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட கார்களின் உதவியுடன், விநியோக நேரத்தைக் குறைக்கவும் வாடிக்கையாளர்கள் எளிதில் வாகனத்தைப் பெறுவதை உறுதிசெய்யவும் மெர்சிடிஸ்-மேபேக் எதிர்பார்க்கிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, 2025ல் 19,007 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2024ல் விற்பனையான 19,565 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், மொத்த விற்பனை எண்ணிக்கையில் 3 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருந்தாலும், வருவாய் அடிப்படையில் இது நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஆண்டாகக் கருதப்படுகிறது.

