வெயிலால் அதிகரிக்கும் மரணம்; நிரம்பி வழியும் பிணவறை

வெயிலால் அதிகரிக்கும் மரணம்; நிரம்பி வழியும் பிணவறை

2 mins read
8e3dd79e-b0ef-4e98-8361-c84e2e83b228
வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இப்படித் தமது இருசக்கர வாகனத்தில் கூரை பொருத்தியுள்ளார் இந்த ஆடவர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகரில் உள்ள அரசு எஸ்எம்எஸ் மருத்துவமனைப் பிணவறை கடந்த இரு வாரங்களாக நிரம்பி வழிகிறது.

அவற்றில் பல சடலங்கள் சாலையோரத்திலிருந்து சேகரிக்கப்பட்டதால், வெயில் தாங்காமல் அவர்கள் மாண்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று (மே 25) அஜ்மீர் அருகே சாரணா எனும் சிற்றூரைச் சேர்ந்த மோத்தி சிங் என்ற 40 வயது ஆடவர் மாண்டுபோனார். இவ்வாண்டில் வெயில் தாக்கத்தால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு அது என்று ராஜஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது.

சுமையுந்தில் கிரானைட் கல்லை ஏற்றியபோது மோத்தி சுருண்டு விழுந்தார். அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது இறந்துபோனார்.

ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்துவதால் சில மாநிலங்களில் உயிரிழப்பும் உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், மோத்தியின் மரணத்திற்குமுன் வெப்பத் தாக்கத்தால் எவரும் உயிரிழக்கவில்லை என்று மாநில அரசு மறுத்து வந்தது.

இதனிடையே, எஸ்எம்எஸ் மருத்துவமனைப் பிணவறையில் குவியும் பிணங்களின் எண்ணிக்கை வெயிலால் பலர் மடிந்துபோனதற்குச் சான்று எனக் கூறப்படுகிறது.

அங்கு 40 உடல்களை வைத்திருக்க முடியும். இந்நிலையில், இம்மாதம் 10ஆம் தேதி அங்கு 22 சடலங்கள் இருந்த நிலையில், இப்போது அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 42ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் பாதிப் பேரை அடையாளம் காண முடியவில்லை. அவர்களின் சடலங்களைக் காவல்துறையினர் சாலையோரங்களில் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இறந்தவர்களின் உடல்களை வைக்க இடமின்றி மருத்துவமனைப் பணியாளர்கள் அல்லாடுகின்றனர்.

உயிரிழப்பு அதிகரித்திருப்பதற்கு கொளுத்தும் வெயிலே காரணம் என அதிகாரிகள் கூறினாலும், விரிவான வழிகாட்டி நெறிமுறைகளால் அவற்றை வெப்பத் தாக்க மரணம் என அதிகாரபூர்வமாக வகைப்படுத்தி, அறிவிக்க இயலவில்லை என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்