திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த ஆண்டு (2025) நடைபெறும் அனைத்துலகக் காற்பந்துப் போட்டியில் புகழ்பெற்ற காற்பந்து விளையாட்டாளர் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கலந்துகொண்டு விளையாடவிருக்கிறது.
மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் இதைத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்தப் போட்டி நடத்தப்படும். போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளையும் மாநில வணிகர்கள் வழங்குவர் என்று கூறப்பட்டது.
மெஸ்ஸி கலந்துகொள்ளும் அனைத்துலகப் போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என்று அமைச்சர் நம்பிக்கையுடன் கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமது எக்ஸ் பக்கத்தில், “FIFA உலகக் கோப்பை வெற்றியாளரான அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா வரலாறு படைக்கவுள்ளது. மாநில அரசின் முயற்சிகள் காரணமாக இந்தக் கனவு நனவாகி வருகிறது. வெற்றியாளர்களை வரவேற்கவும் காற்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராவோம்,” என்று பதிவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறின.