நடுவானில் கோளாறு: அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

1 mins read
a5aaa807-060d-4119-babd-e433b10237da
விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. - கோப்புப்படம்: ஏர் இந்தியா

கொச்சி: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அது உடனடியாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த 160 பயணிகள் உயிர் தப்பியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா, கேரளாவின் கோழிக்கோட்டுக்கு இடையே விமானச் சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா.

புதன்கிழமை (டிசம்பர் 17) 160 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

நடுவானில் விமானத்தை தரையிறக்குவதற்குப் பயன்படும் ‘லேண்டிங் கியர்’, அதன் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். மேலும், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, அந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து அவசரச் சேவைகளும் தயார்நிலையில் இருந்ததாகவும் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும் கொச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த விமானத்தைப் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது, அதன் வலது பக்கம் உள்ள இரண்டு டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது.

விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்