சென்னை: மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ப் பதற்றம் குறித்தும் அதன் எதிரொலியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் விவாதிக்க புதன்கிழமை (மார்ச் 25) மாலை ஐந்து மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
வளைகுடா வட்டாரத்தில் நிலவும் போர்ப் பதற்றம், எரிசக்தி பாதுகாப்பு, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது,
மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.
இந்தியக் குடிமக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என திரு மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் காரணமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 24), அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்தே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

