புதுடெல்லி: இந்தியாவில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் பரிந்துரைக்கு அமைச்சர் நிலைக் குழு இன்று (ஆகஸ்ட் 21) ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் மன்றத்தின் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்றம் ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் பல பொருள்களுக்கு வரி குறையும்.
பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர் நிலைக் குழு, தற்போது 5%, 12%, 18%, 28% ஆக உள்ள நான்கு விகித கட்டமைப்பை இரண்டு விகிதங்களுடன் மாற்றுவதற்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
ஜிஎஸ்டி 2.0 என்று அழைக்கப்படும் இது, வரி அமைப்பை எளிமையாகவும், பொதுமக்களுக்கு சாதகமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, தற்போதுள்ள 12%, 28% வரி அடுக்குகள் நீக்கப்படும். புதிய அமைப்பின் கீழ், 12% அடுக்கில் இருந்த பொருள்களில் 99% குறைந்தபட்சமான 5% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படும்.
அதேபோல, 28% வரி இருந்த பொருட்களில் 90%க்கும் மேற்பட்டவை 18% வரி விதிப்புக்கு மாற்றப்படும்.
புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள், சொகுசு கார்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருள்களுக்கு 40% வரி விகிதம் விதிக்கப்படும்.
இந்த மறுசீரமைப்பு பயனருக்கும் வணிகர்களுக்குப் பெரும் நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மருந்துகள், பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடைகள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையலாம். வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
இந்த எளிமையான, வெளிப்படையான வரி அமைப்பு நடுத்தர வர்க்கம், விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜிஎஸ்டி முறையில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்திய அரசு 12% , 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்தபிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.