பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் வெளியீடு

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் வெளியீடு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

11 Oct 2026 - 1:15 pm

2 mins read

சென்னை: பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை நேரடியாகத் தெரிவிப்பதற்கு வசதியாக முதல்வர், அமைச்சர்களின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தனியொரு கட்சியாகப் பெரும்பாலான இடங்களை வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றார்.

அதன்பின் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, துறைவாரியாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கவும், அரசின் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கவும் முதல்வர், அமைச்சர்களின் அதிகாரபூர்வ தொடர்பு விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல்வருக்குத் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகளுடன், அவர்களின் கைப்பேசி எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் அமைச்சர்களின் எண்களுக்குத் தொடர்புகொண்டு நேரடியாகத் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இந்த அழைப்புகளைத் துறையின் உயர் அதிகாரிகள் கையாள்வர்.

பொதுமக்களின் புகார்கள், பிரச்சினைகளின் தன்மை, அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து அவை உடனே அத்துறை அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள முதல்வர், அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள், அவர்கள் எம்எல்ஏவாகப் பொறுப்பு வகிக்கும் தொகுதிக்காக வழங்கப்பட்டவையாகும். இது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், தொலைபேசி எண்கள் பகிரப்படுவது புதிய நடைமுறை என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
தவெகவிஜய்மின்னஞ்சல்அமைச்சர்முதல்வர்