தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்

2 mins read
d944b4d4-4d0e-47d4-b496-d1a5b0f2db49
உயிர் பிழைத்த ரமே‌ஷ் விஸ்வா‌ஷ்குமார். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ் / இணையம்
multi-img1 of 2

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

40 வயதான ரமேஷ் விஸ்வா‌ஷ்குமார் என்பவர்தான் மரணத்தையே ஏமாற்றிய மனிதனாகியுள்ளார்.

இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பதும், விபத்துக்குள்ளான விமானத்தின் 11A இருக்கையில் அமர்ந்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விமானத்தில் சென்றவர்களில் இவரைத் தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.

வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணி வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பெரிய சத்தம் கேட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் தாம் இறந்துபோன பயணிகளின் உயிரற்ற உடல்களுக்கு அருகே இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள அஸார்வா மருத்துவமனையில் விமானப் பயணிகளின் உறவினர்கள் பதற்றத்துடன் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்க, ரமேஷ் விஸ்வா‌ஷ்குமார் தொலைக்காட்சி, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

தன்னுடன் வந்த தன் இளைய சகோதரர் அசோக்கை தேடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், யாராவது அசோக்கை தேடுவதில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

ரமேஷ் விஸ்வா‌ஷ்குமாரும் அவரது குடும்பத்தாரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகின்றனர். அண்மையில் தனது தம்பியுடன் இந்தியாவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

“என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என்னைச் சுற்றி உயிரற்ற மனிதர்களைப் பார்த்ததும் பயமாக இருந்தது. அதனால் எழுந்து ஓடத்தொடங்கினேன். அப்போது யாரோ ஒருவர் என்னைப் பார்த்ததும், தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டார்,” என்று கூறியுள்ளார் ரமேஷ் விஸ்வா‌ஷ்குமார்.

இந்த விபத்தில் இவருக்குப் பெரிதாக காயங்களோ மற்ற பாதிப்புகளோ ஏற்படவில்லை என்பது மற்றொரு ஆச்சரியத் தகவல். விமானம் கீழே விழுந்து நொறுங்கிய வேகத்தில் இவரது மார்புக்கூட்டில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்