தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசி ஏற்றுமதி 775% அதிகரிப்பு: அமைச்சர் பியூஷ் கோயல்

2 mins read
8837ebff-95d0-43c0-8f00-47780592435e
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் கைப்பேசி தயாரிப்பு 146 விழுக்காடு கூடியுள்ளது. - மாதிரிப்படம்: கேன்வா

புதுடெல்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் கைப்பேசி தயாரிப்பும் ஏற்றுமதியும் பெருவளர்ச்சி கண்டுள்ளதாக வணிக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தெரிவித்தார்.

கடந்த 2020-21 நிதியாண்டுமுதல் 2024-25 நிதியாண்டுவரை கைப்பேசி தயாரிப்பு 146% கூடியது. அதாவது, ரூ.213,773 கோடியிலிருந்து (S$32.03 பில்லியன்) ரூ.525,000 கோடியாக உயர்ந்தது.

அதுபோல, அக்காலகட்டத்தில் கைப்பேசி ஏற்றுமதி 775% கூடி, அதாவது ரூ.22,870 கோடியிலிருந்து ரூ.200,000 கோடியாக வளர்ச்சி கண்டது.

‘பிஎல்ஐ’ எனும் தயாரிப்பு சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டமும் தேசிய தொழில்துறை வளர்ச்சித் திட்டமுமே அதற்குக் காரணம் என்று திரு கோயல் தமது எழுத்துவழி பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்விரு ஊக்குவிப்புத் திட்டங்களும் உள்நாட்டில் தயாரிப்பை முடுக்கிவிட்டதாகவும், வேலை வளர்ச்சிக்கும் ஏற்றுமதிக்கும் ஆதரவளித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பிஎல்ஐ’ திட்டம் மருந்துகளுக்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்வதைக் குறைக்க உதவியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்திட்டம் அறிமுகமானதை அடுத்து, இறக்குமதிகளைச் சார்ந்திருப்பது குறைந்துள்ளதாகவும் உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலை வலுவாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பொருள்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ‘மேக் இன் இந்தியா 2.0’ திட்டத்தையும் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின்கீழ் வரும் 27 துறைகளில் தற்போது அத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

இந்திய உற்பத்தித் துறைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தேசிய தொழில்துறை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 12 புதிய திட்டங்களுக்காக ரூ.28,602 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் திரு கோயல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்