பாட்னா: பீகார் இளையர்கள், சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
வேலை வாய்ப்புக்காக இடம்பெயரும் இளையர்களின் கவலைகளை தாம் அறிந்திருப்பதாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருதரப்பினரும் தீவிர பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக அங்குள்ள பெகுசராய் நகரில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது, பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்வதை பீகார் இளையர்கள் தவிர்க்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “வேலையின்மை, பண வீக்கம், வினாத்தாள் கசிவு, அரசு பணிகள் குறைப்பு, பயனளிக்காத பணி தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள்தான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட காரணங்கள்,” என்றார்.
“பீகார் இளையர்களின் உணர்ச்சிகளை உலகம் காணவும், மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் வெள்ளை டி-சட்டை அணிந்து எங்களுடன் சேருங்கள். இளையர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்.
“பல ஆண்டுகளாக அநீதியை அனுபவித்து வரும் மாநில இளையர்களுக்கு ‘நீதிக்கான உரிமை’ கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.