திருப்பதியில் நவீன அருங்காட்சியகம் திறப்பு

திருப்பதியில் நவீன அருங்காட்சியகம் திறப்பு

படம்: மாலை மலர்

16 Nov 2026 - 7:57 pm

1 mins read

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகைதரும் லட்சக்கணக்கான பக்தர்களைக் கவரும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட எஸ்.வி. அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் திறந்துவைத்த அந்த அருங்காட்சியகம், தற்போது பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருமலையில் ஏறக்குறைய ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள அருங்காட்சியகம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு மொத்தம் 14 தனித்துவமான காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 8,000க்கும் மேற்பட்ட பழங்காலக் கலைப்பொருள்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரிய சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் திவ்ய திருவுருவம், ஆலய வரலாறு, இந்தியச் சிற்பக்கலை, கோவில் கட்டடக்கலை, பழங்கால ஆயுதங்கள், இசை, நடனம் ஆகிய கருப்பொருள்களில் ஒவ்வோர் அரங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதன் முக்கியமான ஈர்ப்பாக ‘பிரம்மாண்டம்’ அரங்கம் திகழ்கிறது.

‘ஹாலோகிராபிக்’ காட்சிகள், 360 டிகிரி ஒலி அனுபவம், மின்னிலக்கக் காட்சி அமைப்புகள் மூலம் பக்தர்களுக்கு நேரடிக்காட்சி அனுபவம் வழங்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ.50 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்