புதுடெல்லி: இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகளை வாங்க பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகளும் அவற்றை இழுத்துச் செல்வதற்காக 327 வாகனங்களும் வாங்கப்பட இருப்பதாக ‘இண்டியா டுடே’ போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிகத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி, பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்தப் பீரங்கிகள் சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பீரங்கிகளின் வருகையால் இந்திய ராணுவத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும். ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இவற்றைத் தயாரிக்கிறது.
பீரங்கிகளுக்கான தயாரிப்பு நடவடிக்கையில் 65% பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்றும் இதன்மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்கப்பட உள்ளன.
இந்திய பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கையானது, உலகளாவிய பாதுகாப்பு ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த எதிர்கால ஏற்றுமதிகளுக்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“உதிரிபாகங்களுக்கான வலுவான விநியோகச் சங்கிலி, தடையற்ற பராமரிப்பு ஆகிய பல்வேறு வழிகளில் இந்திய ராணுவம் பயனடையும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் நீண்டகாலத் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு உறுதியாகிறது.
“பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது,” என்று துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.