புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால் அந்த மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.
மழை, வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள், 19 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
அதேபோல், நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 29வது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் வியாழக்கிழமை (ஜூலை 30) சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணப் பணிகளில் இரு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்,” என்று தெரிவித்தார்.

