புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடி சிறந்த மனிதர் என அதிபர் டிரம்ப் கூறினார்.
தாம் அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு தாம் இந்தியாவுக்கு செல்லக்கூடும் என அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
எடை இழப்பு மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்த பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் “சிறப்பாக நடந்து கொண்டிருந்தன” என்றார்.
“இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்லவிதமாக நடந்து வருகின்றன. அவர் (பிரதமர் மோடி) ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை பெரும்பாலும் நிறுத்திவிட்டார்.
“அவர் என்னுடைய நண்பர். நான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார். இதுகுறித்து நாங்கள் ஆராய்வோம். நான் அங்கு செல்ல வாய்ப்புண்டு,” என்றார் டிரம்ப்.
‘இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட நேரடிக் கேள்விக்கு, ‘அதற்கு வாய்ப்புண்டு’ என்றார் அதிபர் டிரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன.
வாஷிங்டனில் வரிவிதிப்பு நடவடிக்கையை அடுத்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் விரும்பவில்லை என்றும் நடப்பாண்டின் இறுதியில் ‘குவாட்’ உச்ச நிலை மாநாட்டில் அதிபர் பங்கேற்க மாட்டார் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், இச்செய்தி வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியா செல்லும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் அமெரிக்க அதிபர்.
இதனிடையே, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியா படிப்படியாக குறைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் அதிபர் டிரம்ப் இந்தியப் பயணம் குறித்து சூசகமாக பேசியிருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இது தொடர்பாக கூட்டு முடிவை எடுத்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அதேசமயம், டிசம்பர் மாதம் முதல் ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்து குறையும் என்றாலும் முற்றிலுமாக நிறுத்தப்பட மாட்டாது என்றும் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து பிப்ரவரி மாதத்துக்குப் பின் எண்ணெய் வரத்து மீண்டும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா ஆகிய இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் தருவிக்கப்படும் என ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

