புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய பங்காளி நாடுகளில் ஒன்றான புருணைக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு, அந்நாட்டின் சுல்தானைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்தியா - புருணை இடையே அரசதந்திர உறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. அதனைக் கொண்டாடும் வகையில் திரு மோடியின் அதிகாரபூர்வ பயணம் அமைகிறது.
செவ்வாய்க் கிழமை புருணை வந்து சேர்ந்த அவரை புருணை பட்டத்து இளவரசரும் அதிகாரிகளும் வரவேற்றனர்.
புதன்கிழமை (செப்டம்பர் 4) தலைநகர் பண்டார் ஸ்ரீ பெகவானில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியாவுடன் இந்தியா - புருணை இடையே இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் இல்லம், உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற பெருமையை பெற்றது. இருபது லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த அரண்மனையில், 1,700 அறைகளுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சுல்தானைச் சந்தித்துப் பேசியது குறித்து தமது அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் பேச்சு நடைபெற்றதாகக் கூறியிருந்தார்.
இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் கடற்துறைப் பாதுகாப்பு, நிலைத் தன்மையை மேம்படுத்த இரு தலைவர்களும் கடப்பாடு தெரிவித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக புருணை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் சென்றபோது வழிநெடுக புலம்பெயர்ந்த இந்தியர்கள் நின்று வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே சீனா தனது செல்வாக்கை அதிகரித்து எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் புருணையில் பேசிய பிரதமர் மோடி, விரிவாக்கம் தேவையில்லை, வளர்ச்சியே நாடுகளுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.
புருணைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று புதன்கிழமை சிங்கப்பூர் சென்றார்.

