போரை முடிவுக்குக் கொண்டுவர மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளன: புட்டின்

போரை முடிவுக்குக் கொண்டுவர மோடியிடம் நல்ல யோசனைகள் உள்ளன: புட்டின்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

02 Oct 2026 - 5:50 pm

1 mins read

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரேன் இடையே பல மாதங்களாகத் தொடர்ந்துவரும் போருக்கு அமைதி வழியில் தீர்வுகாண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாக ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல யோசனைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் சிறந்த நட்புறவைக் கொண்டிருந்தபோதிலும், உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருவதாகத் தெரிவித்துள்ள திரு புட்டின், இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் காண்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

அமைதியை மீட்டெடுக்க திரு மோடி முன்வைக்கும் யோசனைகளுக்கு ரஷ்யா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகத் திரு புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான, அதேவேளையில் அமைதியை விரும்பும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தூதரகப் பேச்சுவார்த்தைகள், தீவிர உரையாடல்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற இந்தியாவின் தொடர்ச்சியான வலியுறுத்தலை ரஷ்யா மதிப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருடனும் இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதைத் திரு மோடி பலமுறை தெளிவுபடுத்தி உள்ளார்.

அனைத்து நாடுகளின் வட்டார ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள இந்தியா, வன்முறைக்கு மாற்றாகப் பேச்சுவார்த்தையே ஒரே வழி என வலியுறுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்