தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருங்கிய நட்பை வெளிப்படுத்திய மோடி, புட்டின்

2 mins read
64e42ead-d968-46df-8933-35371f917c03
‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் மோடி (வலது), புட்டின். - படம்: இபிஏ
multi-img1 of 2

ஷாங்காய்:   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தங்களுக்கிடையிலான நெருங்கிய நட்பை மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சீனாவில் நடைபெறும் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இருவரும் பங்கேற்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் திரு புட்டினின் சொகுசு காரில் பயணம் செய்தனர்.

திரு மோடி தமது நெருங்கிய நண்பர் என்று திரு புட்டின் கூறினார். ஆயுதப் பாதுகாப்பு கொண்ட தமது ‘லிமோசீன்’ சொகுசு காரில் திரு புட்டின், திரு மோடியை அழைத்துச் சென்றார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“சவால்கள் நிறைந்த காலகட்டங்களில்கூட இந்தியாவும் ர‌ஷ்யாவும் தோளோடு தோள் நின்றிருக்கின்றன,” என்றார் திரு மோடி.

இந்தியாவும் சீனாவும் ர‌ஷ்யாவிடமிருந்து ஆக அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளாகும். ர‌ஷ்யா, உலகளவில் இரண்டாவது ஆக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாகும்.

ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்தார். இருந்தாலும் இந்தியாவும் சீனாவும் அவ்வாறு செய்வதை நிறுத்தப்போவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், உக்ரேன் போரை விரைவில் நிறுத்த உக்ரேன், ர‌ஷ்யா இரண்டும் முயற்சி எடுக்கும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றபோது மோடி, புட்டின் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாமும் திரு புட்டினும் ஒன்றாக இருக்கும் படத்தை திரு மோடி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

“புட்டினும் நானும் இருதரப்புத் தொடர்பு குறித்த சந்திப்புக்கு ஒன்றாகச் சென்றோம். அவருடனான உரையாடல்கள் என்றைக்கும்போல் பல அம்சங்களை அலசுபவையாக இருந்தன,” என்று திரு மோடி எக்ஸ் தளத்தில் விவரித்துப் பதிவிட்டார்.

உக்ரேன் போரை நிறுத்த புட்டின் மீதான நெருக்குதல் தொடர வேண்டும் என்று உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்