புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக தாய்லாந்து, இலங்கைக்கு வியாழக்கிழமையன்று புறப்பட்டார்.
அவர் பேங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
அவரது இப்பயணம் தாய்லாந்து, இலங்கை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் என்றும் வட்டார அளவில் நன்மை பயக்கும் என்றும் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% வரி விதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மோடி தனது பயணத்தை தொடங்கியதாகவும் அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய வர்த்தக அமைச்சிடமிருந்து முறையான அறிக்கை வெளியாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் பங்களிக்கும் என்றும், கடந்த கால அடித்தளங்களை மேலும் கட்டியெழுப்பும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சமூக ஊடகப் பதிவில், “வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் வங்காள விரிகுடா வட்டாரத்தின் மேம்பாடு, இணைப்பு, பொருளியல் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது,” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பின் மற்ற தலைவர்களைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் உற்பத்தி ரீதியில் மேலும் வலுப்படுத்த தாம் முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
2016ஆம் ஆண்டு சார்க் எனப்படும் தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) மாநாடு தொடர்பான செயல்பாடுகள் இந்தியாவின் எதிர்ப்பால் முடங்கியதாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து பிம்ஸ்டெக் மீது இந்தியா தனது அழுத்தமான பார்வையைப் பதித்துள்ளது.
வட்டார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான தளமாக இந்த அமைப்பை இந்தியா கருதுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பங்ளாதேஷ், பூட்டான், மியன்மார், நேப்பாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் உச்ச நிலை மாநாடு ஏப்ரல் 4ஆம் தேதி பேங்காக்கில் நடைபெறுகிறது. இம்முறை கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடியும் தாய்லாந்து பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இம்மாநாடு நிறைவடைந்த பின்னர் வெள்ளிக்கிழமை மாலை தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு இலங்கை அதிபரை சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.
அவரது இப்பயணத்தின்போது, இந்தியாவும் இலங்கையும் பத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.