புதுடெல்லி: பெருநிறுவனங்களுக்கு இந்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியும்கூட, அதன் பலன்களை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாகவோ புதிய வேலைவாய்ப்புகளாகவோ மாற்றாமல் தொழில்துறையினர் தங்கள் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்திய வர்த்தக, தொழில்துறைக் கூட்டமைப்பின் (ஃபிக்கி) நூற்றாண்டு விழா, ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தொழில்துறையினரின் அணுகுமுறை குறித்து வெளிப்படையாகத் தனது அதிருப்தியைப் பதிவுசெய்தார்.
2014ஆம் ஆண்டில் அடிப்படை பெருநிறுவனங்களுக்கு வரி 30 விழுக்காடாக இருந்தது என்றும் பின்னர் அது 22 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது என்றும் திரு மோடி தெரிவித்தார்.
தற்போது ரூ.12 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், எவ்வளவு சலுகைகள் அளித்தாலும் தொழில்துறையினரின் பசி அடங்குவதாகத் தெரியவில்லை என விமர்சித்தார்.
“உங்கள் நிறுவன ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தினீர்களா? அல்லது புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்தீர்களா?,” என்று தொழில்துறையினரின் மனப்போக்கு குறித்து அவர் கேள்வியை எழுப்பினார்.
மேலும், ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, வருமான வரித் திரும்பப் பெறும் நடைமுறைகளை விரைவுபடுத்தியதன் மூலம், முடங்கிக்கிடந்த நிதி விடுவிக்கப்பட்டு நுகர்வு அதிகரித்துள்ளதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் மேலும் வரிச்சலுகைகளைக் கோரித் தொழில்துறையினர் இந்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளையில், பிரதமர் சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகளைத் தயக்கமின்றித் தெரிவிக்குமாறும் தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
“இது பழைய அரசாங்கம் அல்ல, தொழில்துறைக்கு நட்பான அரசு. உங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து வெளிப்படையாகக் கடிதம் எழுதுங்கள்,” என்றார் திரு மோடி.
மேலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க ‘சுதேசி’ கொள்கையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மருந்துத் தயாரிப்பு, எஃகு, அலுமினியம் ஆகிய துறைகளில் தற்சார்பு அடைய வேண்டும் என்றார்.
“உலகின் மருந்தகம் என இந்தியா அழைக்கப்பட்டாலும், மூலப்பொருள்களுக்கு நாம் இன்றும் இறக்குமதியையே நம்பியிருக்கிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான நீண்டகால முதலீட்டு முடிவுகளில் ‘இந்தியா முதலில்’ என்பதே அடிப்படையாக இருக்க வேண்டும்,” என்றும் பிரதமர் மோடி இந்தியத் தொழில்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
