புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்றும் ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஸ்இ ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார் என்றும் தெரிகிறது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இரண்டு நாள் உச்சநிலை மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட பல பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரிவிதிப்புக்குப் பிறகு அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனாவுடன் இந்தியா நெருக்கம் பாராட்டத் தொடங்கியுள்ளது. இதை அமெரிக்கா விமர்சித்துள்ளது.
இத்தகைய சூழலில் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்திக்க இருப்பது உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு எல்லையில் நடந்த இருதரப்பு மோதலுக்குப் பிறகு இந்தியா, சீனா உறவிலும் விரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் இரு நாடுகளுமே உறவுகளை மேம்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டன.
விரைவில் இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடிப் பயணிகள் விமானச்சேவை தொடங்க உள்ளது.