மணிலா: இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல் கொள்கை’யின் மையமாக ஆசியான் நாடுகளுடனான உறவு திகழ்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் அதிபர் மார்கோஸ் ஜூனியர் விடுத்த அழைப்பினை ஏற்று, இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் மோடி பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வருகை தந்துள்ளார்.
அங்கு நடைபெற உள்ள 23வது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாடு, 21வது கிழக்காசிய உச்சநிலை மாநாடு ஆகியவற்றில் அவர் பங்கேற்கிறார்.
தமது பயணத்துக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட திரு மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பன்முக உறவுகள் வர்த்தகம், இணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாடுகளில், இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து உலகத் தலைவர்களுடன் விரிவான கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிலிப்பீன்சில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களையும் திரு மோடி சந்தித்து உரையாட உள்ளார்.
மணிலாவில் குவாட் உச்சநிலை மாநாடு
இதனிடையே, ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பின் தலைவர்கள் கூட்டமும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) மணிலாவில் நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆஸ்திரேலிய, ஜப்பான் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர்.
சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் வட்டாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், பல்வேறு வட்டாரச் சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
