புதுடெல்லி: பெருஞ்செல்வந்தர் அனில் அம்பானிக்குச் சொந்தமான, ரூ. 3,000 கோடி (437.67 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான 40 சொத்துகளை இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் அதன், கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்குவதற்கு எதிரான விசாரணையில் சேர்த்துக்கொண்டுள்ளது.
மும்பை நகரில் அம்பானி குடும்ம் வசிக்கும் பாலி ஹில் ரெசிடன்ஸ், டெல்லியில் இருக்கும் ரிலையன்ஸ் நிலையம் ஆகியவை அந்தச் சொத்துகளில் அடங்கும். தகவல் தெரிந்தவர்கள் இந்த விவரங்களை வெளியிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் குறிப்பிட்டது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் அந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்குவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் டெல்லி, நொய்டா, காஸியாபாத், மும்பை, பூனே, தானே, ஹைதராபாத், சென்னை (காஞ்சிபுரமும் அடங்கும்), கிழக்கு கோதாவரி போன்ற பகுதிகளில் இயக்குநரகம் அம்பானிக்குச் சொந்தமான பல சொத்துகளை விசாரணையில் தொடர்புப்படுத்தியுள்ளது.
அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள், நிலங்கள் உள்ளிட்டவை அச்சொத்துகளில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ 3,084 கோடி என்றும் அவர்கள் கூறினர்.
ஆகக் கடைசி நிலவரப்படி இதுகுறித்து ரிலையன்ஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஆர்எச்எஃப்எல்), ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஆர்சிஎஃப்எல்) ஆகியவை திரட்டியதாகக் கூறப்படும் கள்ளப்பணம் நல்லப்பணமாக மாற்றப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
மேலும், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் லிமிடெட் (ஆர்கோம்), அதள் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான விசாரணையையும் தாங்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் குறிப்பிட்டனர். கடன் தொடர்பிலான மோசடிகள் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் ரூ 27,000 கோடி கள்ளப்பணம் நல்லப்பணமாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

