ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று வீசிச் சென்ற பொட்டலத்தால் வயதான தம்பதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் பல்லகாயத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் (வயது 70). இவரது மனைவியான 64 வயது அப்பயம்மா பார்வையற்றவர்.
இரண்டு நாள்களுக்குமுன் அவர்களது வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்று உருண்டையான பொருள்கள் கொண்ட பொட்டலத்தை வீசிவிட்டுச் சென்றது.
வீட்டு வளாகத்தில் இருந்த அந்தப் பொட்டலத்தை, வாசனை இல்லாத தேயிலைத் தூள் பொட்டலம் என்று நினைத்த அப்பயம்மா அதைக் கொண்டு தேநீர் தயாரித்தார்.
கணவனும், மனைவியும் அதைப் பருகினர். தேநீர் அருந்திய சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். குரங்கு கொண்டுவந்து போட்ட பொட்டலத்தில் இருந்த பொருள் குறித்து அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

